The following editorial has appeared in the August 1-15, 2008 edition of “Unmai":-
http://www.unmaionline.com/20080801/page01.html
தலையங்கம்
தமிழ்நாட்டுக்குச் செய்யும் துரோகத்துக்கு
தமிழர்கள் தக்கபரிசைக்கொடுப்பார்கள்
“அண்ணா" பெயரையும் “திராவிட" என்ற இனக் கலாச்சாரப் பெயரையும் தாங்கிக்
கொண்டிருக்கும் ஒரு கட்சியின் (அ.இ.அ.தி.மு.க.வின்) பொதுச்செயலாளராக
இருக்கக் கூடிய செல்வி ஜெயலலிதா அவர்கள் - சேது சமுத்திரக் கால்வாய்த்
திட்டத்தின் செயல்பாட்டை முடக்கும் வகையில் ராமன் பாலத்தை இடிக்கக் கூடாது
என்றும் அது இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் என்றும் அறிக்கை விடுவதோடு
அல்லாமல், இந்த அடிப்படையில் உச்சநீதிமன்றத்திலும் வழக்கினையும்
தொடுத்துள்ளார் என்பது அண்ணாவையும், திராவிட இயக்கத்தையும், தமிழர்
நலனையும் கொச்சைப்படுத்துவதாகும்.
ராமன் பாலத்தை ராமனே இடித்தான் என்று கூறலாமா? என்று தனது வைணவ மத உணர்வோடு கேள்வியையும் தொடுத்துள்ளார்.
இப்பொழுது அவரை நோக்கி திராவிட இயக்கத்தின் தாய்க்கழகம் என்ற முறையில்
வைக்கப்படும் வினாக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்.
(1) ராமன்- இராமாயணம்பற்றிய தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர்களின் கருத்துகளை எதிர்க்கிறீர்களா?
அப்படியென்றால் அய்யா, அண்ணா கொள்கைகளுக்கு விரோத மானதுதான் அகில இந்திய அண்ணா தி.மு.க. என்று பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா?
(2) அதுதான் உங்கள் நிலைப்பாடு என்றால், கட்சியிலிருந்தும், கொடியிலிருந்தும் அண்ணாவை அகற்றிவிடுவீர்களா?
அண்ணா, புலவர் குழந்தை எழுதிய இராவண காவியத்திற்கு மதிப்புரை எழுதும்போது, என்ன கூறினார்?
திராவிட இயக்கச் சிந்தனைக்கு எதிரான சிந்தனையும், போக்கும் உங்களுக்கு
இருக்கிற காரணத்தால், திராவிட என்ற இன - கலாச்சார வரலாற்றுப் பெயரையும்
கட்சியிலிருந்து நீக்கி விடுவீர்களா?
இந்த இரு கேள்விகளுக்கும் உரிய பதிலை சந்தேகத்துக்கு இடமின்றி அறிவித்த
பின்னர்தான் ராமனுக்கும், ராமாயணத்துக்கும் வக்காலத்து வாங்கவேண்டும் -
அதுதான் அறிவு நாணயமும், நேர்மையுமாகும்.
(3) மூன்றாவதாக தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கைக்குள் நுழையலாம்.
20 லட்சம் ஆண்டுகளுக்குமுன் ராமனால் கட்டப்பட்ட பாலம் என்று அறிக்கை
வெளியிட்டுள்ளீர்கள்! 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனித குலமே தோன்றவில்லை
என்ற அடிப்படை மானுட வரலாற்றைத் தெரிந்து கொள்ளாமல், ராமன் 20 லட்சம்
ஆண்டுகளுக்குமுன் பாலம் கட்டினான் என்று கூறுவது அறிவுக்கும்,
வரலாற்றுக்கும் பொருந்தாத கூற்று அல்லவா?
உலகில் முதன்முதலாகப் பாலம் கட்டப்பட்டதே கி.மு. 650 இல் எகிப்தில்
நைல் நதிக்குக் குறுக்கேதான் என்ற வரலாற்று உண்மைக்கு மாறாக, 20 லட்சம்
ஆண்டுகளுக்குமுன் ராமன் பாலம் கட்டினான் என்பது பொய்யுரையல்லவா?
அதுவும் அணிலும், குரங்குகளும் பாலம் கட்டின என்பது பகுத்தறிவுக்கு உகந்ததுதானா?
(5) ராமன் பாலத்தை ராமனே உடைத்தான் என்பதற்கு ஆதாரம் உண்டா என்று வினாவை எழுப்பியுள்ளீர்கள். ஆதாரம் உண்டு - கம்ப இராமாயணத்தில்.
யுத்த காண்டம்: மீட்சிப் படலம் 4057 ஆம் பாடலில் இதற்கான ஆதாரம் இருக்கிறது.
மரக்கலம் இயங்க வேண்டி வரிசிலைக் குதையால் கீறித்
தருக்கிய இடத்துப் பஞ்ச பாதகரேனும் சாரிற்
பெருக்கிய வேழு மூன்று பிறவியும் பிணிகள் நீங்கி
நெருக்கிய வமரர்க்கெல்லா நீணிதியாவர் அன்றே!
மரக்கலங்கள் (கப்பல்கள்) ஓட்டுவதற்கு அப்பாலம் தடையாக இருந்தது
என்பதால், ராமனே தனது வில்லின் நுனியால் சேது (பாலம்)வைக் கீறி உடைத்து
வழி விட்டான் என்கிறது இப்பாடல்.
கட்டியவனே உடைத்துவிட்டான். பாலம் எங்கே இருக்கிறது?
உ.வே. சாமிநாதய்யர் பதிப்பித்த சிறீமத் கம்பராமாயணம் - யுத்த காண்டம் -
37 மீட்சிப் படலம், பாடல் எண் 4057-க்கு உரை எழுதும் போது அய்யர்
எழுதுகிறார்: வில்லின் குதையால் (அம்பின் நுனி) கீறித் தருக்கிய இடம்
இன்றும் தனுக்கோடி என்றும், அவ் விடத்தில் உள்ள நீர்ப் பகுதி தனுக்கோடி
தீர்த்தம் என்றும் வழங்கு கிறது.
நிரம்ப அழகிய தேசிகர் இயற்றிய சேது புராணத்திலும், பல பட்டடைச் சொக்க நாதப் புலவர் இயற்சிய தேவை உலாவிலும் இதன் வரலாறு காண்க.
கப்பல்கள் ஓட்டுவதற்கு அப்பாலம் தடையாக இருந்தமையால், ராமனே தனது
வில்லின் நுனியால் பாலத்தைக் கீறி உடைத்து விட்டான் என்பதுதானே இதன்
பொருள்.
இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்? ராமன் பாலத்தை உடைத்தான் என்பதற்கு
ஆதாரமே இல்லை என்று ராமாயணத்தைக் கற்றுத் தேர்ந்த வல்லுநர்கள் அறுதியிட்டு
உறுதியாகக் கூறுவதாகக் கூறியுள்ளீர்களே - எந்த வல்லுநர் எந்த ஆதாரத்தை
வைத்துக்கொண்டு இவ்வாறு கூறினார் என்பதை விளக்க முன்வருவீர்களா?
(6) ராமன் என்று ஒருவர் வாழ்ந்ததேயில்லை. அது வெறும் கற்பனை என்று
முன்னர் வாதிட்ட மத்திய அரசு, இப்பொழுது ராமன் என்று ஒருவர் வாழ்ந்தார்
என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளீர்கள்.
ராமன்தான் கட்டிய பாலத்தை உடைத்தான் என்று மத்திய அரசின் வழக்கறிஞர் கூறியதை எடுத்துக்காட்டி இந்த விவாதத்தை முன்வைத்துள்ளீர்கள்.
ராமாயணம் என்பது அராபியன் நைட் போன்ற பஞ்ச தந்திரக் கதைதான் - ஆரியர் -
திராவிடர் போராட்டத்தைச் சித்திரிக்கக் கூடியதுதான் என்று வரலாற்று
அறிஞர்கள் எல்லாம் கூறியுள்ளனர். பண்டித ஜவகர்லால் நேரு, விவேகானந்தர்,
நீலகண்ட சாஸ்திரி என்று நீண்ட பட்டியலே இதற்கு ஆதாரமாக உண்டு.
இந்தக் கற்பனைக் கதாபாத்திரமான ராமன் பாலம் கட்டினான் என்று
ராமாயணத்திலிருந்து எடுத்துக்காட்டிய காரணத்தால், விவாத முறையில், அந்த
ராமாயணத்தில் உள்ள இன்னொரு பாடலை எடுத்துக்காட்டி, வழக்குத்
தொடுத்தவர்களின் விவா தத்தை முனை முறியச் செய்யும் அறிவார்ந்த
அணுகுமுறைதான் இதுவே தவிர, ராமனை ஒப்புக்கொண்டதாகப் பொருள்படுமா?
எதிரி பயன்படுத்திய ஆயுதத்தைக் கொண்டே எதிரியைத் தாக்கும் அறிவார்ந்த
விவாதத்தை தனக்குச் சாதகமாக ஆக்கத் துடித்து அறியாமையை வெளிப்படுத்தும்
பரிதாபம்தான் இதில் விஞ்சி நிற்கிறது.
கடவுள்களைப்பற்றியும், புராணங்களைப் பற்றியும், இதி காசங்கள்
குறித்தும் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், திராவிட இயக்க
எழுத்தாளர்களும், பேச்சாளர்களும், புராண, இதிகாசங்களில் உள்ளவற்றை
எடுத்துக்காட்டி மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டினால் அந்தக்
கடவுள்களையும், புராண, இதி காசங்களில் உள்ள கதாபாத்திரங்களையும்
அய்யாவும், அண் ணாவும், திராவிட இயக்கச் சிந்தனையாளர்களும் ஏற்றுக்கொண்டு
விட்டனர் என்று அர்த்தமா?
விவாதத்தை விவாத முறையில் சந்திக்கும் சரக்கு இல்லாத நிலையில், பந்தை
அடிக்க முடியாவிட்டால் காலை அடி என்கிற தப்பாட்டத்தை ஆட முயற்சிக்கலாமா?
(7) காஷ்மீரில் ஹஸ்ரத்பால் திருத்தலத்தில் திருடப்பட்ட புனிதப் பொருள்
மீட்கப்பட்டது போன்றும், டாவின்சிகோட் திரைப்படம் கிறிஸ்தவர்களின் மனதைப்
புண்படுத்துகிறது எனத் தடை செய் யப்பட்டது போன்றும் ராமன் பால
நம்பிக்கையையும் அணுக வேண்டும் என்று கூறியுள்ளீர்கள்.
ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, சங் பரிவார் காவிக் கூட்டத்தின் அசலாக,
அந்த அமைப்புகளுக்குத் தலைமை தாங்கும் தகுதி உடையவராகவே மாறிவிட்டீர்களே!
திராவிட இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். எண்ணம் கொண்ட ஒருவர் தலைமை தாங்கும்
இடத்திற்கு வந்துவிட்டார் என்றுதானே கருதவேண்டியுள்ளது.
உண்மையிலே இருந்த ஒரு பொருள் திருடப்பட்டதை - ஒரு மணல் மேட்டினை ராமன்
பாலம் என்று உண்மைக்கு மாறாகச் சொல் வதோடு முடிச்சுப் போடலாமா? உலகின் பல
கடல் பகுதிகளிலும் இத்தகைய மணல் மேடுகள் உள்ளனவே - அவற்றை எந்த ராமன்
கட்டினானாம்?
(8) தி.மு.க. தலைவர் கருணாநிதி ராமபிரான் ஒரு குடிகாரன் என்று
பகிரங்கமாகக் கூறுகிறார். இந்துக்களின் வணக்கத்திற்குரிய இறைவன் பெருமாள்
காமத்தில் நீந்திக் களித்தவர் என்றும், இப்போது கருணாநிதி
கண்டுபிடித்துள்ளார் என்று குறிப்பிட்டுள் ளீர்கள்.
இது கலைஞர் கருணாநிதி புதிதாகக் கண்டுபிடித்து கூறியதல்ல - இதிகாசங்களிலும், புராணங்களிலும் உள்ளதைத்தான் கூறியிருக்கிறார்.
தந்தை பெரியார்மீதும், அறிஞர் அண்ணாமீதும் தாங்கள் படித்த குற்றப் பத்திரிகையாகத்தான் இதைக் கருதவேண்டியுள்ளது.
தந்தை பெரியார் அவர்களின் ஆய்வுக் கருவூலமான இராமாயண பாத்திரங்கள் என்ற
நூலைப் படித்ததுண்டா?, இராமாயண குறிப்புகளை அறிந்ததுண்டா? -
இராமாயணத்திலிருந்து காண்டம், பாடல்களை எல்லாம் ஆதாரத்துடன்
கூறப்பட்டுள்ளதே - அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும் படித்ததுண்டா? அண்ணாவின்
புராண மதங்கள் நூலைப்பற்றிக் கேள்விப்பட்டதுதான் உண்டா? நீதி தேவன்
மயக்கம் எனும் நாடகத்தில் அண்ணாவே வேடந்தாங்கி விடுத்த வினாக்களை
நேரமிருந்தால் இப்பொழுதாவது படித்துப் பார்க்கத் தயாரா?
இவற்றையெல்லாம் பற்றி அறிந்திராத ஒருவர் அண்ணா பெயரில் உள்ள கட்சிக்குத் தலைமை தாங்கலாமா? என்பது முக்கியமான கேள்வியாகும்.
(9) ராமன் சேதுவைத் தகர்த்து மதக் கலவரங்கள் ஏற்பட மேற்கொள்ளப்படும்
எந்த முயற்சியையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
சகித்துக் கொள்ளாது என்று அறிக்கை விடுத்துள்ளதன் மூலம் இந்தப்
பிரச்சினையை முன்வைத்து ஒரு மதக் கலவரத்தை உண்டாக்கும் நோக்கம் தங்களுக்கு
இருக்கிறது என்பது விளங்கவில்லையா?
பிறப்பால் சூத்திரன் என்ற காரணத்துக்காக சம்பூகனைக் கொன்றவனை ராமபிரான்
என்று (மிகவும் பவ்யமாக) தங்கள் அறிக்கையில் தாங்கள் குறிப்பிட்டு
இருப்பதன்மூலம் தங்களின் குருதியில் கொப்பளித்துக் கொண்டிருக்கும்
வருணாசிரம உணர்வை தமிழர்களால் புரிந்துகொள்ள முடிகிறது. கொஞ்சம் கொஞ்சமாக,
கடைசியில் தங்களை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டிருப்பதுகூட ஒருவகையில்
நல்லதுதான் என்றுதானே கருதத் தோன்றுகிறது.
(10) கடைசிக் கடைசியாக ஒரு கேள்வி:
2001 மே மாதத்தில் தமிழகச் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் தங்கள்
கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் (பக்கம் 83, 84) கீழ்க்கண்டவாறு
கூறப்பட்டுள்ளதே!
இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியான கப்பல்
போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு
நோக்கி கப்பல்கள் செல்லவேண்டுமென்றால், இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான்
செல்லவேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேது சமுத்திரத்
திட்டம். இத் திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும், இலங்கையின்
தலைமன்னார்க்கும் இடையில் உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல்
போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகள் அகற்றி ஆழப்படுத்தி
கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம் என்று
அ.இ.அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலே கறாராக துல்லியமாகக்
கூறப்பட்டுள்ளதே - இதிலிருந்து இப்பொழுது முரண்பட்டுப் பேசுவானேன்?
ராமன் பாலம் அல்ல - ஆடம்ஸ் பிரிட்ஜ் - மணல் மேடுகள் என்று அன்று
அதிகாரப்பூர்வமான கட்சியின் தேர்தல் அறிக்கை என்ற ஆவணத்தில் குறிப்பிட்ட
அந்த ஞானோதயம் இப்பொழுது இல்லாமல் போன மர்மம் என்ன?
தமிழ்நாட்டின் நலன் முக்கியமல்ல; சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்
நிறைவேற்றப்பட்டால், அந்தப் பெருமை தி.மு.க.வுக்குப் போய்விடும் என்கிற
முரட்டுத்தனமான குறுகிய அரசியல் நோக்கம் தான் இதில் புழுவாக நெளிகிறதே
தவிர, வேறு அறிவார்ந்த கருத் துகளோ, உண்மைகளோ தங்கள் அறிக்கையில் காணப்பட
வில்லையே!
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா உள்ளிட்ட திராவிடர் இயக்கத் தலைவர்களின்
கருத்துகளை, அவர்கள் வெளிப்படுத்திய கொள்கைகளை எல்லாம் குழிதோண்டிப்
புதைப்பதையும், தமிழர்கள் நீண்டகாலமாகக் கனவு கண்ட ஒரு திட்டத்தை அரசியல்
சுயநல நோக்கத்தோடு எதிர்ப்பதையும், தமிழர்கள், தமிழ்நாட்டு மக்கள்
கவனத்தில் கொள்ளமாட்டார்கள் என்று மனப்பால் குடிக்க வேண்டாம்.
தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் இந்தத் துரோகத் திற்குத் தக்க தருணத்தில்
தக்க பரிசை வட்டியும் முதலுமாகக் கண்டிப்பாக அளித்தே தீருவார்கள் -
சந்தேகம் வேண்டாம்! அரசியல் நோக்கம் எங்களுக்குக் கிடையாது. திராவிட
இயக்கச் சிந்தனைகளுக்கு முரணாக தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர்
கூறிய கருத்துகளுக்கு எதிராக அதேநேரத்தில் அவர்களின் பெயர்களை
முத்திரையாகப் பொறித்துக்கொண்டு அரசியல் நடத்துவோரை அம்பலப்படுத்துவதுதான்
எங்களின் நோக்கமாகும். அ.இ.அ.தி.மு.க.வில் உள்ள அருமைத் தோழர்கள் சிந்திப்
பார்களாக!
கி.வீரமணி
ஆசிரியர்